பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
ராசிபுரம்: விஜயதசமி விழாவை முன்னிட்டு, ராசிபுரம் பட்டணம் சாலையில், அம்புசேவை நடந்தது. ராசிபுரம் கைலாசநாதர் மற்றும் பொன்வரதராஜ பெருமாள் கோவில் சார்பில், நேற்று, விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, அம்புசேவை எனும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். கோவில்களில், ஸ்வாமிக்கு பயன்படுத்தப்படும் பூஜை பாத்திரங்கள், ஸ்வாமி சிலைகள், வில், அம்பு, ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு, அவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின், குதிரை வாகனத்தில் முருகன், காளை வாகனத்தில் பெருமாள் ஸ்வாமி எழுந்தருளி, அம்புசேவை செய்யப்படும். கடந்த, 17 ஆண்டுகளாக, கைலாசநாதர் கோவிலில் நடந்த விஜயதசமி அம்புசேவை விழா, நேற்று, மாலை, ராசிபுரம் அடுத்த பட்டணம் சாலையில் நடந்தது. அதையடுத்து, ஸ்வாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு வாழை மரங்கள் நடவு செய்து, சிவாச்சியார் உமாபதி, அம்பு எய்தி சேவை செய்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.