பதிவு செய்த நாள்
15
அக்
2013
02:10
இப்போதெல்லாம் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறது. அதுவும் பிரதோஷத்தன்று, ஆலயத்தில் அர்ச்சகருக்கே நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்டத்தைப் பார்க்க முடிகிறது. வாசலில் இருக்கும் நந்தி பகவானின் கழுத்தில் கையைப் போட்டுக் கட்டிடப் பிடித்துக்கொண்டு நந்தியின் காதில் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் பின்னால், அதேபோல சொல்வதற்கு ஏராளமானோர் வரிசையாக நிற்கிறார்கள்.
கோயிலில் அன்றாடம் ஆண்டவனைத் தொட்டு, அபிஷேக- அலங்காரங்களால் வழிபாடு செய்யும் அர்ச்சகராகவே இருந்தாலும் சரி; பூஜை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் கோயிலில் உள்ள எந்தத் தெய்வ விக்கிரகத்தையும் தொடக்கூடாது. ஆனால், நாம் நந்தி கழுத்தில் கையைப் போட்டு, அதன் காதில் முணுமுணுப்பது முறையா?
பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய வழிபாட்டுமுறை, சோம சரக்தப் பிரதட்சிணம் மட்டுமே! (சோம சூத்ரப் பிரதட்சிணம் என்று சொல்வார்கள்). அதாவது, பிரதோஷத்தன்று நந்தியின் பின்னால் இருந்து, அதன் கொம்புகளின் வழியாக ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும். அதன்பின், நாம் வழக்கப்படி வலம் வருவதற்கு எதிர்ப் பக்கமாக எதிர் வலம் வரவேண்டும். அவ்வாறு வரும்போது கோமுகத்தை (அபிஷேகத் தீர்த்தம் வெளியே வரும் வழியை)த் தாண்டக்கூடாது. சில கோயில்களில் அபிஷேக தீர்த்தம் வரும் வழியை, பார்வையில் படாதபடி மூடிவைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில், சண்டிகேஸ்வரர் சந்நிதிவரை போய் விட்டுத் திரும்ப வேண்டும்.
தொடர்ந்து, பழையபடி, அதாவது... நாம் வழக்கப்படி வலம் வருவோம் அல்லவா? அந்த முறைப்படி வலம்வந்து, கோ முகத்துக்கு அந்தப் பக்கமாக நின்று விட வேண்டும். அல்லது, சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அந்தப் பக்கமாகவே நின்று விடவேண்டும். பின், அங்கிருந்து (போன வழியிலேயே) எதிர்வலமாக வந்து, நந்திபகவானை அடைய வேண்டும். இவ்வாறு, மூன்று முறை செய்ய வேண்டும்.
சோம சூத்ரப்பிரதட்சிணம் எனும் இந்த முறையை பிரதோஷத்தன்று மட்டுமே செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை முறையாகச் செய்தால், கடன் தொல்லைகளில் இருந்தும் வியாதிகளில் இருந்தும் விடுபடலாம்.
இப்படிப்பட்ட பிரதோஷ வழிபாடு, சனிப் பிரதோஷ வழிபாடு ஆகியவற்றின் மகிமை; சோமவார வழிபாட்டின் மகிமை; பஞ்சாக்ஷர மகிமை; சிவதான மகிமை; விபூதி மகாத்மியம்; திரிபுண்டர மகாத்மியம் ருத்திராட்ச மகிமை;
ஸ்ரீருத்ர மகிமை எனப் பலவிதமான தகவல்களையும் பிரம்மோத்தர காண்டம் எனும் நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்நூலில் ஓர் அற்புதமான கவசம் உள்ளது. சிவ கவசம் எனும் இப்பாடல் தொகுதி, 21 பாடல்களாக அமைந்துள்ளது. இடப யோகீஸ்வரர் என்ற யோகி, பத்திராயு என்னும் மன்னருக்கு உபதேசித்த இந்தக் கவசம் அற்புதமான அமைப்பு கொண்டது. பாடல்களின் முடிவில், காக்க என்ற சொல்லைக் கையாளும் போது, மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளில் காக்க; விரைபுனல் அதனுள் வீழ்ந்து வரிந்திடாது எம்மைக் காக்க என்றெல்லாம் வேண்டி நிறைவுபெறுகிறது, அதன்பிறகு, சிவபெருமானுடைய பஞ்ச முகங்களையும் பாடுகின்றது. இதோ அந்தப் பாடல்...
ஆய தற்புருடன் எம்மைக் குணதிசை அதனில் காக்க;
ஆன்வரும் அகோரமூர்த்தி தென்திசை அதனில் காக்க;
தவளமாமேனிச் சத்யோசாதன் மேல் திசையில் காக்க;
மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனில் காக்க;
எங்கள் ஈசானோதவன் இருவிசும்பு எங்கும் காக்க;
-இவ்வாறு சிவபெருமானுக்கு உரிய ஐந்து முகங்களையும் சொன்ன இக்கவசம், சிவபெருமானுக்கு உண்டான பல்வேறு திருநாமங்களையும் சொல்லி, அதற்கான காரணங்களையும் கூறுகிறது. நிறைவாக, இக்கவசத்தின் முடிவில் பலச்ருதி சொல்லப்பபட்டிருக்கிறது.
பஞ்ச பாதகங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
அஞ்சலின் மறலியும் அஞ்சி ஆட்செயும்
வஞ்ச நோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்
தஞ்சம் என்று இதனை நீ தரித்தல் வேண்டுமானால்..! என
பலனையும் சொல்லி நிறைவு பெறுகிறது இக்கவசம்.
மூல நூலில் உள்ள சிவகவச பாடல்களை முழுமையாகத் தந்து, அந்தப் பாடல்களுக்கு ஓர் அருமையான உரையை தமிழறிஞரான வடக்குப்பட்டு த. சுப்ரமணிய பிள்ளை என்பவர் எழுதி இருக்கிறார். ஆன்மிக அனுபூதிமானான இவர் இந்நூலுக்கு ஆழ்ந்த உரை கண்டதோடு, அதை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி இருக்கிறார். மூல நூலான பிரமோத்தர காண்டத்திற்கு ஓர் ஆராய்ச்சி உரையும் வரைந்திருக்கிறார்.
பிரமோத்தர காண்டத்தை தமிழில் செய்யுள்களாகவே இயற்றியவர் வரதுங்கராம பாண்டியர் என்பவர். அருமையான இந்த நூலை முழுவதுமாகப் படிக்க முடியாவிட்டாலும்கூட, இதில் உள்ள சிவ கவச த்தைப் பிரதோஷத்தன்றாவது கோயிலில் பாராயணம் செய்வது, சகல நலன்களையும் தரும்.