ஊத்துக்கோட்டை: பரதீஸ்வரர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபரதீஸ்வரர் கோவில். சிதிலமடைந்து காணப்பட்ட இந்த பழமை வாய்ந்த கோவில் சமீபத்தில் சீரமைத்து கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து இங்கு பிரதோஷம், நவராத்திரி விழாக்கள் கோலாகலமாக நடந்து வருகிறது. அக் 18 சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் சிவலிங்கம் முழுவதும் அன்னம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் தாராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இறுதியில் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா குறித்து கோவில் அர்ச்சகர் கிஷோர்குமார்சர்மா கூறுகையில், ஒவ்வொரு ஐப்பசி மாதமும் பவுர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னாபிஷேக விழா நடத்தப்படும். விவசாயம் செழிக்க விவசாயிகள் தங்களது வீட்டில் அன்னம் மற்றும் விளைநிலத்தில் விளைந்த காய்கறிகளை சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தனர். இதன் மூலம் சுவாமி தங்களுக்கு அருள்பாலிப்பார் என நம்பப்படுகிறது என்றார். இதேபோல், சுருட்டப்பள்ளி ஸ்ரீபள்ளிகொண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை ஸ்ரீஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலங்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.