தென்காசி: தென்காசி அருகே குறி சொல்ல அம்மன் சிலையை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஓருவரை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசியை அடுத்த இடைகால் சின்னப்பனையன்குளத்தில் உள்ள முப்புடாதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 29ம் தேதி காளியம்மன் கல் சிலை ஒன்று திருடு போனது. இதையடுத்து ஊர் சமுதாய தலைவர் ”ப்பிரமணியன் இலத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடியவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் நேற்று இலத்தூர் விலக்கு அருகே ரோந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப் போது சந்தேகப்படும்படியாக சென்ற தென்காசி மலையான் தெருவை சேர்ந்த பட்டமுத்து மகன் முத்துபாண்டி (42), மடத்தூரைச் சேர்ந்த எபனேசன் மகன் கண்ணன் (44), கீழப்புலியூரை சேர்ந்த தம்பிரான் மகன் சேது(28) ஆகியோரிடம் விசாரித்ததில் அவர்கள் இந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்துப்பாண்டி இடையன்குளத்தில் ஒரு கோயிலில் குறி சொல்லி வந்தார். அதில் வருமானம் வரவில்லை. அவரது நண்பர்கள் சிலர் ஒரு அம்மன் சிலையை வைத்து குறி சொன்னால் நிறையபேர் வந்து குறி கேட்பர் .அதனால் வருமானம் பெருகும் என ஆசை வார்த்தை கூறினர்.இதனால் அவர்களுடன் சேர்ந்து சின்னப்பனையன் குளத்தில் திருட்டில் ஈடுப்பட்டதும், திருட்டிற்கு ஆட்டோவை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் கீழப்புலியூரை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் புலிப்பாண்டியும் இவ்வழக்கில் ஈடுபட்டிப்பது தெரிவந்தது. தலைமறைவான புலிப்பாண்டியை போலீசார்தேடி வருகின்றனர். திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.