பதிவு செய்த நாள்
25
அக்
2013
10:10
திருப்பதி: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோற்சவ ஏற்பாடுகளை, தேவஸ்தானம் துவக்கி உள்ளது. ஆண்டுதோறும், பாஞ்சராத்ர விதிப்படி, கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, பிரம்மோற்சவம் நடத்தப்படும். வழக்கம்போல், இந்த ஆண்டு, நவம்பர், 29ம் தேதியில் இருந்து, டிசம்பர், 7ம் தேதி வரை, பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அதற்கான ஆயத்தப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருப்பதி செயல் இணை அதிகாரி கோலா பாஸ்கர் கூறியதாவது: பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சி அன்று, திருச்சானூர் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, தேவையான ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை போல்,இந்த ஆண்டும், பக்தர்கள் பட்டு வஸ்திரம் சமர்பிக்கலாம். பிரம்மோற்சவ நாட்களில், திருச்சானூர் வரும் பக்தர்களுக்கு, ஏழுமலையான் கோவில் லட்டு, வடை, பிரசாதங்கள் விற்பனை செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம், புத்தக விற்பனை, ஆயுர்வேத மருத்துவ மையம் அமைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள, அனைத்து கோவில்களிலும், ஆடி மற்றும் கார்த்திகை மாதம், பவுர்ணமி அன்று பூஜை நடத்துவதற்காக, நம் கோவில் திட்டம் துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, 17 ஆயிரம் கோவில்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மூன்று கட்டமாக, 42 ஆயிரம் கோவில்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் கட்டமாக, நவம்பர்,17ம் தேதி, கார்த்திகை மாத பவுர்ணமி அன்று, 22 ஆயிரம் கோவில்களில், பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை, திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.