பதிவு செய்த நாள்
30
அக்
2013
04:10
*உயிர்களின் மீது அன்பு காட்டி வாழ்வதே கடவுளின் மீது செலுத்தும் உண்மை அன்பாகும். உயிர்களுக்கு உதவி செய்பவனைக் கண்டால் கடவுள் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறார்.
*ஒருமுகப்பட்ட மனதுடன் கடவுளின் மலர்ப்பாதத்தை நினைக்கின்ற நல்லவர்களோடு உறவாடுங்கள்.
*கோல் சொல்லி குடும்பத்தைப் பிரிப்பது, கலங்கி நிற்போரைக் காட்டிக் கொடுப்பது, ஆசை காட்டி தீங்கு இழைப்பது போன்ற தீமைகளை யாருக்கும் செய்யக்கூடாது.
*நீதியும், நேர்மையும் மனதில் நிலைக்கச் செய்யுங்கள். கருணையில்லாத மனிதர்களை விட்டு விலகுங்கள்.
*உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக கபடமாக பேசுபவர்களிடம் பழகாதீர்கள்.
*உண்மையைப் பேசுங்கள். அதுவே உங்களின் வார்த்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
*எல்லாருக்கும் உணவு கிடைக்க வேண்டும். உணவு இல்லை என்ற சொல் மாறி, பசி இல்லை என்று சொல்ல வேண்டும்.
*யாருடைய உள்ளத்தில் தயவு, கருணை இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். கருணை இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாதவரே.
*நல்லவர்களின் மனதை நடுங்கச் செய்வது, வலிய வழக்கு போட்டு மானத்தைக் கெடுப்பது, நல்ல நண்பர்களைப் பிரிப்பது, தானம் கொடுப்பதை தடுப்பது இவை அனைத்தும் பெரும்பாவம்.
*பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். தவம் செய்யும் ஞானியரை கை கூப்பி வணங்குங்கள். கடவுளை எப்போதும் தியானியுங்கள்.
*கடவுளுக்குச் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அந்த பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.
*பிறர் குற்றங்களில் கருத்தைச் செலுத்தாதீர்கள். எந்தக் குற்றமும் செய்யாத படி உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.
*மனிதப்பிறவி எடுத்து இந்த உலகிற்கு வந்து விட்டோம். நாம் செய்ய வேண்டிய நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடித்து விடுங்கள்.
*உறவினர்களை உபசரிப்பதும், கண்களில் கருணை பெருகச் செய்வதும், பழமையை மறவாமல் நன்றி பாராட்டுவதும் இல்லறத்தில்நம் கடமையாகும்.
*கடவுளை உண்மையுடன் வழிபட்டால் அன்றி பொய், பொறாமை போன்ற தீய பண்புகளை நம்மிடம் இருந்து அகற்ற முடியாது.
*உள்ளத்தில் கோபம் எழும்போதே அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் அது பெரிய தீமையில் நம்மை ஆழ்த்தி விடும்.
*அருள் கூர்ந்த பெரியவர்களும், நல்லவர்களுமே நாட்டை ஆள வேண்டும். கொடுங்கோல் மனம் படைத்தவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்வது கூடாது.
*கடவுள் சிந்தனை அற்ற மனிதர் களின் வீட்டில் உணவு உண்பது கூடாது. பகட்டான ஆடையும், ஆடம்பர வாழ்வும் ஆன்மிக வாழ்வுக்கு எதிரானவை.
*வெள்ளம் வரும் முன் அணை போடுவது போல, தனக்குத் தானே தீய எண்ணங்கள் மனதில் புகாமல் விழிப்புடன் இருப்பதே அறிவுடைமை.
-வள்ளலார்