திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும்,கேட்டாலும், நினைத்தாலும், திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இக்கோயிலின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு, முருகனே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார்களில் முத்துசுவாமி தீட்சிதரும் ஒருவர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஓருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் பாலகனாய் முத்துசுவாமி தீட்சிதரின் முன்னர் தோன்றி, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில் சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில், திருத்தணி முருகனை மானசீக குருவாக ஏற்கலாம்.