குருவித்துறை: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், தீபாவளியை முன்னிட்டு தேவியருடன் சுவாமி தைலகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இக்கோயிலில் சுயம்புவாக மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் 7 அடி உயரத்தில் ஒரே சந்தனமரத்தால் எழுந்தருளியுள்ளனர் . மூலவருக்கு அபிஷேகம் நடப்பதில்லை. தீபாராதனைகள், பூஜைகள நடக்கிறது. ஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் சுவாமிக்கு தைலகாப்பு அலங்காரம் நடக்கும். இதையொட்டி, நேற்று மாலை 4 மணிக்கு ரங்கநாத பட்டர் வேதம் முழங்க, 108 மூலிகைகள் கலந்த சாம்பிராணி தைலகாப்பு அலங்காரம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி வரை திருவுருவ மேனியுடன் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிப்பர். பக்தர்களுக்கு தைலம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் செல்வி, நிர்வாக அதிகாரி சுமதி, கோயில் கணக்கர் வெங்கடேசன், ஊழியர்கள் கிருஷ்ணன், நாகராஜன் செய்திருந்தனர்.