பதிவு செய்த நாள்
08
நவ
2013
11:11
ஆண்டியாய் நின்றவனும் அவனே!
அழகான பழமுதிர்சோலையிலும் அவனே!
ஆய்க்குடியில் அரசாலுபவனும் அவனே!
ஸ்ரீ பாலமுருகன் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயில்களில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ஆய்க்குடியும் ஒன்று. இங்கு முருகப்பெருமான் அனுமன் நதிக்கரையில் பஞ்ச விருட்ஷங்களுக்கு (அரசு, வேம்பு, மாவிலங்கு, மாதுளை, கறிவேப்பிலை) அடியில் பஞ்ச தேவதைகளுக்கு (‹ரியன், அம்பிகை, விஷ்ணு, விநாயகர், மஹேஸ்வரர்) மத்தியில் பாலவடிவாய் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மூலவருடைய விக்ரஹம் ஆய்க்குடி மல்லாபுரம் நஞ்சைப்புரவு ஏரியில் கண்டெடுத்ததாக வரலாறு. அந்நாளில் ஆய்க்குடி அக்ரஹாரத்தில் முருக பக்தரான ஓர் அந்தணர் சித்தராகி சமாதியானார். அவரின் குலத்தவர்கள் அங்கு ஓர் அரசமரத்தை நட்டு சமாதிக்குப் பூஜைகள் செய்துவந்தனர். மல்லாபுரம் கண்டெடுத்த ஸ்ரீ பாலமுருகன் சிலையை அந்த சித்தரின் சமாதியில் வைதீக முறைப்படி பிரதிஷ்டை செய்து தியானசித்தரின் குலத்தவர்களைக் கொண்டே வைதீக முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும் என்ற சாஸ்திர விதிப்படி ஸ்ரீ பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். இத்திருக்கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் மேல் கூரை 1931 வரை தென்னை ஓலையாலேயே கட்டப்பட்டு வந்தது. சுமார் 150 வருடங்களுக்கு முன்புதான் இக்கோயிலின் நிர்வாகம் பழைய திருவிதாங்கூர் மன்னரால் கீழ கிராமம் அந்தணர்களிடம் இருந்து ஏற்றுவாங்கப்பட்டது. அதுவரை கீழகிராமம் ஜனங்களுடைய நிர்வாகத்தில்தான் இருந்தது. அப்போதுதான் சஷ்டி திருநாள், உத்ஸவம் முதலியவை தொடங்கப்பட்டன. மயில் மண்டபம், மணி(வெளி) மண்டபம், பிரகாரம் முதலியன உண்டாயின. உத்ஸவ விக்ரகத்திற்கு முத்துகுமாரசுவாமி என்று பெயர் வைக்கப்பட்டது. மூலவருடைய பூஜை வைதீக முறைப்படி அந்தணர்களாலும், உத்ஸவருடைய பூஜை உத்ஸவ காலங்களிலும் மற்ற பவனி வரும் காலங்களிலும் சிவாச்சாரியார்களாலும் நடைபெற்று வருகின்றன.
மூலஸ்தான விக்ரகமும், உத்ஸவ விக்ரகமும் ஒரே உருவில் அமையப்பெற்றிருக்கின்றன. ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் (வஜ்ரம் சக்திவரம் அபயம்) வீற்றிருக்கும் மயிலின் முகம் பத்ம பீடத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றது. மிகுந்த வரப்பிரசாதியான விக்கரஹம் இத்திருக்கோயிலின் அரச இலை விபூதிப் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது. இத்திருக்கோயிலின் படிப்பாயசம், காவடி, பால்குடம் இவை முக்கிய வழிபாடுகள் நதிக்கரையிலுள்ள படி துறையில் முருகன் குழந்தைகளுடன் பாயாசம் உண்பதாக ஐதீகம். காவடியில் உள்ள சக்தியாயுகத்தில் பாலமுருகனை வைதீக முறை மத்திரங்களால் ஆவாஹனம் செய்து கும்பம் வைத்து ஜபங்களும், அபிஷேகங்களும், பூஜைகளும், காவடி எடுப்பவரின் கிரஹத்தில் வைத்து செய்த கணுவுள்ள பிரம்பில் இடும்பனை ஆவாஹனம் செய்து பூஜை செய்து காவடியெடுப்பவர் காவிஉடை அணிந்து கிராமப் பிரதாக்ஷணம் செய்து முருகன் சன்னதியில் கொண்டு சேர்ப்பது வழக்கம். இந்த முறை தற்பொழுது மிகுதியும் அந்தணர்களாலேயே செய்யப்படுகிறது. பால்குடம் என்ற வழிபாடுகளின் அடிக்கடி நடக்ககூடிய வழிபாடுகளில் முக்கியமான ஒன்று பால்குடம் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கோயிலில் பஜனம் இருந்து பால்குடம் எடுக்கிறார்கள். முருகன் சன்னதியில் பஜனம் இருந்து பால்குடம் எடுக்கிறார்கள். முருகன் சன்னதியில் பஜனம் இருந்து படிபாயாசம் வைத்து பிள்ளை பேறு அடைந்தவர்கள் ஏராளம். சமீபகாலமாக வெள்ளி கோரத்தில் பிரகாரத்திற்குள் மாலையில் முத்துக்குமாரசுவாமி பவனியும் ஒர் வழியாடாக நடைபெறுகின்றது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை அன்றும் சகல சஷ்டி அன்றும் தேர்பவனி நடைபெறும். இங்கு கந்தசஷ்டிதிருநாள் 7நாட்கள் மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படுகின்றது. செந்தூருக்கு அடுத்தபடியாக சஷ்டி திருநாள் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது.