அனைத்து முருகன் கோவிலிலும் இன்று சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
புதுக்கோட்டை: விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று(8ம் தேதி) மாலை சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். அருணகிரி நாதர் தவமிருந்து அஷ்டமா சித்தி பெற்றதும், சதாசிவ பிரமேந்திரர் வழிபட்டதுமான பெருமைக்குரிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. மாலை, 5 மணிக்கு சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசிக்க உள்ளனர். இதுபோன்று குமரமலை முருகன் கோவில், மாதவத்தூர் முருகன் கோவில், கீரமங்கலம் அடுத்த நகரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவி, பொன்னமராவதி மலையாண்டி முருகன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் திருக்கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.