இணை கமிஷனர்கள் மாற்றத்தால் சூரசம்ஹார விழாவில் குழப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2013 11:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூர சம்ஹார விழா நடக்கும் நேரத்தில் மூன்று இணை கமிஷனர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடுகள் செய்வதில் குழப்பம் ஏற்பட்டதால், பக்தர்கள் பரிதவித்தனர். கடந்த பிப்., மாதம் திருச்செந்தூர் கோயில் இணை கமிஷனராக இருந்த சுதர்சன் மாற்றம் செய்யப்பட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை கமிஷனராக இருந்த ஜெயராமன் பொறுப்பேற்றார். அதன் பின்பு மதுரை சித்தரை திருவிழாவிற்காக மீண்டும் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி இணை கமிஷனர் அன்பு மணி இணை கமிஷனர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரால் இரு மாவட்டங்களையும் பார்க்க முடியவில்லை என கழன்று கொண்டார். இந் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட இணை கமிஷனர் ஞான சேகரன் பொறுப்பு இணை கமிஷனராக மாற்றப்பட்டார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 410 கோயில்களில் கண்காணிப்பு செய்து, திருச்செந்தூர் கோயிலையும் கண்காணிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். சூர சம்ஹார கோயில் திருவிழா நடைமுறைகள், ஏற்பாடுகள் சரி வர தெரியாத நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கோயிலில் உள் பிரகாரத்தில் பாலங்கள் அமைக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வலம் வருபவர்களுக்கும், சுவாமி தரிசனம் செய்து வெளியேறும் பக்தர்களுக்கும் இடையூறு இல்லாமல் ஏற்பாடு செய்யயப்பட்டிருக்கும். இந்த முறை அதை கோயில் நிர்வாகம் செய்யாததால் கோயிலுக்குள் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவியாய் தவித்தனர். மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி நீர், தற்காலிக கழிப்பறை வசதி, உடைமாற்றும் அறைகள் குறைந்த அளவில் மட்டுமே செய்திருந்தனர். பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.