ஆத்தூர்: ஆத்தூரில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆத்தூரில் சோமநாதசுவாமிகோவிலில் கந்த சஷ்டி விழா 3ம் தேதி துவங்கியது. விழாவை ஒட்டி ஹோமகுண்டம் வளர்க்கப்பட்டு சுப்பிரமணியருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. 6ம் நாளான கந்த சஷ்டி தினத்தன்று சுவாமி கோயிலிலிருந்து ரத வீதிகள் வழியே வீதி உலா வந்தார். பின்னர் ஆத்தூர் பஞ்., அலுவலகம் முன்பு முருகப்பெருமான் 4 தலைகளுடன் வரும் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மறுநாள்(9ம்தேதி) மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், திருவீதி உலாவும் இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். திருக்கல்யாண விழாவில் கட்டளைதாரர்களான டி.சி.டபிள்யு நிறுவனத்தின் கந்தசாமி, சோமலட்சுமி மற்றும் திரளான பெண்களும்,பக்தர்களும் கலந்து கொண்டனர்.