ஈரோடு மாவட்டதில் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் வடகரையில் வேணுகோபாலசுவாமி ஆலயம் உள்ளது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு மைசூரை ஆண்டு வந்த வீர நஞ்சராயர் என்ற மன்னனால் கட்டப்பட்டது. ராஜகோபுரத்திற்கு முன்பாக சுமார் அறுபதடி உயரமுள்ள கருட ஸ்தம்பம் ஒரே கல்லால் செய்யப்பட்டு வானுயர்ந்து நிற்கிறது. இத்தீப ஸ்தம்ப <உச்சியில் தாமரை வடிவில் அமைந்த பத்மபீடம் விளங்குகிறது. கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழாவின் போது இதன் உச்சியில் திருக்கோடி தீபம் ஏற்றுவர். இக்கருட ஸ்தம்பத்தினை உருவாக்குவதற்கு, இவ்வூருக்கு வடபால் உள்ள மேற்கு மலைத் தொடர்களில் ஒன்றான கம்பத்து ராயன் மலையிலிருந்து கல் எடுத்து வரப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்த கருட ஸ்தம்பத்தைச் சுற்றி அழகான மண்டபம் அமைக்கப்பட்டு ஆலயமாக அமைந்துள்ளது. இத்தூணின் அடிப்பக்கம் சுமார் பதினாறடி சுற்றளவு உடையதாக இருக்கிறது. தூணின் கிழக்குப் பக்கம் சுமார் ஆறடி உயரத்தில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். தூணின் பின்புறம் மூலவரான வேணுகோபால ஸ்வாமியைத் தொழுத வண்ணம் கருடன் காட்சி தருகிறார். தூணின் மற்ற இரு பாகங்களிலும் சங்கு, சக்கரங்கள் காட்சியளிக்கின்றன. இந்த கருட ஸ்தம்பத்தில் உள்ள ஆஞ்சநேயரையே மூலவராகக் கொண்டு தனிச் சன்னதி கொண்ட ஆலயமாக அமைத்துள்ளார்கள். ஆஞ்சநேயர் சன்னதிக்கு வலதுபுறம் ராமர், லட்சுமணர், சீதை, அனுமனின் உற்சவ மூர்த்திகள் தனிச் சன்னதி கொண்டுள்ளனர். ஆஞ்சநேயர் சன்னதிக்கு இடதுபுறம் ராகவேந்திர சுவாமியின் பிருந்தாவன பீடம் அமைக்கப்பட்டு தனிச் சன்னதியாக விளங்குகிறது. கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னதியோடு மற்ற இரு சன்னதிகளும் ஒரே மண்டபமாக இணைந்துள்ளதால் மூன்று சன்னதிகளையும் வலம் வந்து தரிசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இங்கு ராம நவமி, ஹனுமத் ஜெயந்தி அமாவாசை போன்ற நாட்களிலும் சனிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாத்திப்படுகிறது. துளசி மாலை அலங்காரத்தில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். பக்தர்கள் வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்தும்; வெண்ணெய் சாத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவு செய்து ஆராதிக்கிறார்கள்.