பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
சென்னை: சென்னையில் உள்ள அய்யப்பன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருக்க துவங்கி உள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், கார்த்திகை முதல் தேதி, மண்டல பூஜை துவங்குவது வழக்கம். இதனால், அன்றைய தினமே, பெரும்பாலான பக்கதர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொள்வர். நேற்று கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு, சென்னையில் உள்ள அய்யப்பன் கோவில்கள் உட்பட பல்வேறு கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், கோவில்களில் நேற்று அதிகாலை காலை 4:00 மணி முதல், பக்தர்கள் குவியத் துவங்கினர். பெரம்பூர் அய்யப்பன் கோவில், மணலி அய்யப்பசாமி கோவில், ஆர்.ஏ.புரம் அய்யப்பன் கோயில், மடிப்பாக்கம், அண்ணாநகர், நங்கநல்லூர் உட்பட அனைத்து கோவில்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாலை அணிந்தனர். மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவி லில் மட்டும், எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், மாலையணிந்து கொண்டனர். இதையொட்டி, கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தன.