பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
நாமக்கல்: கார்த்திகை தீபத்திருவிழா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கார்த்திகை முதல் தேதியே, தீபத் திருநாள் வந்ததால், ஐயப்பன் கோவில்களிலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து கொண்டனர். மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மட்டும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால், நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில், சிவாலயங்கள், பெருமாள் கோவில், அம்மன் கோவில்களில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கோவில்களின் மாடங்களில் விளக்குகள் எரியவிட்டு, தீபத்திருவிழா கொண்டாப்பட்டது. மேலும், வீடுகள் தோறும் வாசல்களில் கோலமிட்டு, அகல்விளக்கில் தீபங்களை ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். குறிப்பாக, ராசிபுரம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், கைலாசநாதர் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர், கூவன்மலை பழனியப்பார் கோவில், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், நாமக்கல் ஏகாம்பரரேஸ்வரர், ரங்கர் சன்னதி, நரசிம்மர், நாமகிரி தாயார் சன்னதிகளில் சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.