பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
திருச்சி: மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. ஹிந்துக்களால் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு, உச்சி மலைப்பகுதிக்கு வந்தனர். மலைக்கோவில் தட்சிணாமூர்த்தி சன்னதியில், இளம் விளக்கு எனப்படும் சிறிய தீபம் நேற்று முன் தினம் மாலை ஏற்றப்பட்டிருந்தது. இந்த இளம் விளக்கில் இருந்து பெறப்பட்ட ஜோதி கொண்டுவரப்பட்டு. தீப, தூப, நிவேதனங்களுக்கு பின், வாண வேடிக்கை முழங்க, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் சன்னதி அருகே, 50 அடி உயரத்தில் உள்ள இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்ட ராட்சத செப்புக் கொப்பரையில், நேற்று மாலை, 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, அரோகரா என, பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். முன்னதாக தீபத்தை முன்னிட்டு, மட்டுவார் குழலம்மை, தாயுமான ஈசர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மேளதாளத்துடன் வீதி உலா வந்தனர். தீப திருவிழானை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதிகள், குபேரலிங்கேஸ்வரர் சன்னதி, வயலூர் முருகன் உள்பட பல கோவில்களில், நேற்றிரவு சொக்கப்பனை எனப்படும் பெரும் ஜோதி வழிபாடு நடந்தது.