பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
கோவில்பட்டி: கோவில்பட்டி கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு பூஜைகளும், சொக்கப்பனை எரித்தலும், கதிரேசன் கோயிலில் மஹாதீபமும் ஏற்றப்பட்டது. கோவில்பட்டி கோயில்களில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் செண்பகவல்லியம்மன் கோயிலில் நடந்த விழாவையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு பரணிதீபம் ஏற்றி பூஜைகள் நடந்தது. மாலையில் கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டு மஹாதீப வழிபாடுகள் நடந்தது. பின்னர் சந்திரசேகரர் ரிஷபவாகனத்தில் திருவீதியுலா வந்தார்.இதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில் மலைக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவர் கதிர்வேல் முருகன், பழனியாண்டவர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் பவுர்ணமி கிரிவலமும், சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதையடுத்து திருக்கார்த்திகை திருவிழாவின் சிறப்பாக கதிரேசன் மலைக்கோயில் முன்பு பக்தர்களின் முருககோஷத்துடன் மஹாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடந்தது. விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், தக்கார் செல்லத்துரை உட்பட கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் கோடிசக்தி விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்கசுவாமி, சங்கரேஸ்வரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் கல்யாணமுருகன் சந்நிதியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை எரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.