பதிவு செய்த நாள்
21
நவ
2013
10:11
பழநி: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், முதல்கட்டமாக பழநிகோயில் உட்பட 23 கோயில்களில் சூரிய மின்சக்தி வசதி (சோலார் பேனல்) அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள பழநிமுருகன், மதுரை திருப்பரங்குன்றம், கூடலழகர்கோயில், அழகர்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், ஸ்ரீரங்கம் உட்பட 23 கோயில்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, பழநி கோயில் அலுவலகத்தில், சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களிடம் கருத்துகேட்பு கூட்டம், இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. இதில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு, மின் உற்பத்தி மையத்திற்கான இடவசதி, உதிரிபாகங்களின் தரம், செலவு விபரம் குறித்து, மதுரை, கோவை, சென்னை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கு மேற்பட்ட நிறுவனங்களிடம், கருத்துகள் கேட்டறியப்பட்டது.
பழநிக்கு 5 இடம்: பழநிகோயில் சார்பில் திருஆவினன்குடி கோயில், பழநியாண்டவர் கலை கல்லூரி, பழநியாண்டவர் மகளிர் கல்லூரி, பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் தலா 13.5 லட்ச ரூபாய் செலவில், 10 கிலோ வாட் மின்சாரம் தயார்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை இந்து சமய ஆணையர் அலுவலகத்தில் 27 லட்ச ரூபாய் செலவில், 20 கிலோ வாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து இணைஆணையர் (பொ) ராஜமாணிக்கம் கூறுகையில், "இந்த திட்டம் மூலம் மின்கட்டணம் 30 சதவிகிதம் குறையும். நவ.28 வரை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது, என்றார்.