மதுரை: அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் புரனமைப்பு பணிகள் முடிந்து அடுத்தாண்டு வைகாசியில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என கோயில் துணை கமிஷனர் வரதராஜன் கூறினார்.அவர், நமது நிருபரிடம் கூறியதாவது: சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் உள்ள 70 தூண்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. கோயில் அருகே பக்தர்கள் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பில் ஆறாயிரம் சதுர அடி பரப்பளவில் மண்டபம் கட்டுமானப்பணி நடக்கிறது. கோயிலுக்கென மடப்பள்ளி அமைக்கப்படவுள்ளது. இப்பணிகள் உபயதாரர் நிதி மூலம் நடக்கிறது. கோயில் முகப்புப்பகுதி ஆறுபடை வீடுகள் அமைப்பில் உருவாக்கப்படும். திருப்பணிகள் முடிந்ததும் அடுத்தாண்டு வைகாசியில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருமாலிருஞ்சோலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோயில் ரூ.34 லட்சம் மதிப்பில் கிரானைட் கற்களால் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் ரசாயன வர்ணம் பூசப்படவுள்ளது. கோயிலில் சில்வர் கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்படவுள்ளன. நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு வனப்பகுதியில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார். உதவி கமிஷனர் முருகானந்தம், உதவி பொறியாளர் கயற்கண்ணி, இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் உடனிருந்தனர்.