பதிவு செய்த நாள்
24
மார்
2011
04:03
ஒழுக்கப் பயிற்சியைக் கடைபிடிப்பதுடன், நடைமுறையாக்கி கொண்டால் பல பண்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். இதனை தினசரி கடமையாகச் செய்தால் படிப்படியாக வெற்றி பெற்று மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். உடல், புலன்கள், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறமுடியும். நற்பண்புகளை பற்றி பேசுவதால் பயனில்லை, மாறாக அவற்றை வாழ்க்கையில் கடைபிடித்து நடக்க வேண்டும்.வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். எதை கூறினாலும், அது உண்மையானதாக இருக்க வேண்டும். அதற்காக எது உண்மையோ அதனை பேச வேண்டும். உயர்ந்த பொருளைப் பெற அதிகபட்ச விலையைக் கொடுக்க வேண்டும். அதுபோல் ஒருவன் மேல்நிலையை அடைய தன்னிடமுள்ள இழிந்த குணங்களைக் கைவிட வேண்டும். உலகில் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புகின்றன. அதனால் அவற்றை கொல்லவோ, துன்புறுத்தவோ, துக்கப்படச் செய்யவோ நமக்கு தார்மீக உரிமையில்லை. வாழ்க்கையில் கட்டுப்பாடு, ஒழுக்கம் இருந்தால் உயர்வடைய முடியும். ஒழுக்கப் பயிற்சியை தவறவிட்டால் வெற்றி பெற இயலாது.மற்றவர்கள் செய்வதைப் பற்றியோ செய்யாததைப் பற்றியோ ஆராய்ந்து கொண்டிருக்காமல், உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருங்கள். வீட்டில் அல்லது வேலை செய்யும் இடத்தில் எந்த விதமான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருந்தாலும், தடுமாறாமல் அதில் மனதைப்பதிந்து நிறைவேற்ற வேண்டும்.
நமது கடமையில் அக்கறையில்லாமல் அவற்றை மறந்து விடுகின்ற போதுதான், நமக்குள் கேடு தலை தூக்குகிறது. கடமை மீதான முழு ஈடுபாடு மனத்தூய்மையை அளிப்பதுடன், முழுமையான மன நிறைவையும் அகமலர்ச்சியையும் அளிக்கிறது. எந்ததொழிலைச் செய்தாலும், நேர்மைப்பற்றுடன் அணுகி, கடவுளுக்கு ஆற்றுகின்ற வழிபாடாகக் கருதி, அர்ப்பணிப்புடன் நம்மை ஒப்படைத்துச் செய்து முடிக்க வேண்டும். பிறருக்கு தியாகம் செய்ய வேண்டுமே தவிர, தமது சொந்த வசதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், தமது நோக்கங்களை அடைவதற்காகவும், மற்றவர்களைப் பலியிடக் கூடாது. பிறரை பாதுகாத்து உதவிபுரிய தனது சொந்த வசதிகளையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், தன் உயிரையும் தியாகம் செய்பவர் பெருமகனாகப் போற்றப்படுகிறான். மாணவர்கள் தமது விதியையும், தேசத்தின் தலைவிதியையும் உருவாக்குபவர்களாகத் திகழ வேண்டும். இதைச் செய்து விட்டால் அவர்கள் எதையும் நடத்திக்காட்டும் குணத்தைப் பெற்று விடுவார்கள். இது அவர்களுடைய மாபெரும் பொறுப்பாகும்.தொண்டு செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டும் இல்லாமல், முழு வாழ்க்கையிலும் பரவியிருக்க வேண்டிய மனப்பான்மையாகும்.