பதிவு செய்த நாள்
28
நவ
2013
05:11
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ராதரிசனம் விழா டிச.,9ல் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது, முக்கிய நிகழ்ச்சியாக டிச., 17ல் நடராஜர் சுவாமிக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகி அம்பாளுடன் அருள் பாலிக்கும் மங்களநாதசுவாமி கோயில், உலகில் முதலில் தோன்றிய கோயில் என்ற பெருமை கொண்டதாகும்.இங்கு ஆடும் திருக்கோலத்தில் சந்தனம் பூசப்பட்டு மரகத நடராஜர் சிலை உள்ளது.சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படும் ஆருத்ரா தரிசனத்தன்று மரகத நடராஜர் சிலைக்கு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.
நடப்பாண்டில், டிச., 9ல் அனுக்ஞை விக்னேஷ்வரா பூஜையுடன் காப்பு கட்டு வைபவம் நடத்தப்பட்டு,ஆருத்ரா தரிசன விழா துவங்குகிறது. டிச.17ல் காலை 10.30 மணிக்கு மேல் மூலஸ்தானம் மரகத நடராஜர் பெருமானுக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு,காலை 11 மணிக்கு சந்தனாதிபதி தைலம் பூசப்பட்டு,சந்தனம்,பால், தயிர்,மஞ்சள்,வெண்ணெய் உள்ளிட்ட 32 வகையான மகா அபிஷேகம் நடைபெறும்.இரவு 10,30 மணிக்கு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபத்தில் எழுந்தளும் நிகழ்ச்சி நடைபெறும்.இரவு 11 மணிக்கு மூலவருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று,சுவாமிக்கு சந்தனம் சாத்தப்படும். டிச.18ல் காலை 10 மணிக்கு கூத்தர் பெருமாள் வீதி உலா,மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம்,இரவு 8 மணிக்கு மாணிக்க வாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி வெள்ளி ரிஷிப சேவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன்,நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் மற்றும் கோயில் நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.