பதிவு செய்த நாள்
03
டிச
2013
10:12
திருப்பதி: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், ஓய்வெடுக்க, புது வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்த உள்ளது. திருமலையில், கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில், பாதயாத்திரை பக்தர்கள், குறைந்தது ஐந்து மணி நேரமாவது வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. அவர்கள், சிறிது நேரம் அமர வசதி யாக, நாராயணகிரி நந்தவனத்தில், 92 லட்சம் ரூபாய் செலவில், அமர்ந்த படியே வரிசையில் செல்ல, நகரும் மேடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது; இதில், ஆறு பேர் வரை அமரலாம். இது, பெண்களுக்கும், முதியவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். கூட்ட நெரிசல் மிகுந்த சமயத்தில் மட்டுமே, இந்த வசதியை பயன்படுத்த உள்ளனர். அதற்கு ஏற்றவாறு, நகரும் மேடை வசதியில், சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் போது, தேவைப்படும் இடத்தில், அதை கொண்டு செல்ல முடியும். ஜனவரி, 1ம் தேதி முதல், இந்த வசதி பயன்பாட்டிற்கு வர உள்ளது.