கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் கோடி அர்ச்சனையில் பங்குபெறும் பக்தர்களுக்கு வழங்க ஒரு லட்சம் குங்குமம் பாக்கெட்டுகள் தயாரிக்கும் பணியில் பெண் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசித்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோயிலில் கோடி அர்ச்சனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த அர்ச்சனையில் பங்குபெறும் பக்தர்கள் ரூ.20 கட்டணம் செலுத்தி பெயர், நட்சத்திரம் கொடுத்து அர்ச்சனை செய்வார்கள். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக குங்குமம் பாக்கெட் மற்றும் பகவதி அம்மனின் உருவப்படம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் களைகட்டி உள்ளதால் தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள். இதனால், கோடி அர்ச்சனையில் பங்குபெறும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதைக் கருத்தில்கொண்டு கோடி அர்ச்சனையில் பங்குபெறும் அய்யப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் குங்குமம் பாக்கெட்டுகள் தயாரிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கொலு மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர்கள் பாக்கெட்டுகளில் குங்குமம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.