பதிவு செய்த நாள்
05
டிச
2013
11:12
ஊட்டி: விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ஊட்டியில், அனைத்து சமய சம்மேளன கருத்தரங்கு மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழாவை கொண்டாட மத்திய அரசு ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. இதன்படி, ஊட்டி ராமகிருஷ்ண மடத்தின் சார்பில், விவேகானந்தர் ஆண்டு விழா, விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. மடத்தின் தலைவர் சுவாமி ராகவேஷானந்தா கூறியதாவது: வரும் 9ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரி அரங்கில், அனைத்து சமய சம்மேளன கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. இதில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், ஜைனம், பிரம்ம குமாரிகள் என, அனைத்து மத தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்; ஒவ்வொரு மதத்தின் சார்பிலும், 100 பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, 40க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தினர் பங்கேற்க உள்ளனர். மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி நடத்தப்படும் இக்கருத்தரங்கிற்கு ஜெ.எஸ்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் தலைமையேற்க உள்ளார். வரும் 15ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை, காலணி, நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட உள்ளன; 200க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு கம்பளி வழங்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் சங்கர், அமெரிக்காவை சேர்ந்த பஹூல் ஜவேரி முன்னிலை வகிக்க உள்ளனர். இவ்வாறு, சுவாமி ராகவேஷானந்தா கூறினார்.