வரும் டிச.,11 ல் ஒரு சிறப்பு இருக்கிறது. அந்த தேதி, மாதம், ஆண்டை கூற வேண்டும் என்றால், 11.12.13 என குறிப்பிடலாம். நூற்றாண்டுக்கு ஒரு முறை தான் 11.12.13 எண் கொண்ட தேதி வருகிறது. மீண்டும் 11.12.13 (2113ம் ஆண்டு) தான் வரும். இது போல் தொடர்ச்சியான எண் கொண்ட தேதி 01.02.03ல் (2103ம் ஆண்டு) வருகிறது. இது விசேஷமான தினம் என, எண்கணித நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி வரும் இவ்வேளையில், 11.12.13 தேதியில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்த, பலர் திட்டமிட்டுள்ளனர். அதுவும் 8.9.10 மணிக்கு முகூர்த்தம் வைக்கவும் (8.9.10.11.12.13 என வருவதால்) திட்டமிட்டுள்ளனர். தங்கம், வெள்ளி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க பலர் திட்டமிட்டுள்ளதால், அமெரிக்காவில் பல நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இத்தினத்தில் குடும்பத்தினர், நண்பர்களுடன் செலவிடவும், சுற்றுலா செல்லவும், பலர் ஆயத்தமாகி வருகின்றனர். இத்தினத்தில் பிறக்கும் குழந்தைகள், அதிர்ஷ்டம் செய்தவர்கள் என நியூமராலஜி நிபுணர்கள் கூறுகின்றனர். 11.12.13 எண்களின் கூட்டுத்தொகை 9. சீன கலாசாரத்தில் 9 அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. 9ம் எண்ணுக்கு "நீண்ட நாள் வாழ்க எனும் அர்த்தமும் உள்ளதாம். 11.12.13 தினத்தன்று 14.15.16 மணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கணித ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.