பதிவு செய்த நாள்
06
டிச
2013
11:12
மேட்டூர்: கிறிஸ்தவ ஆலயம், மேட்டூர் அணைக்குள் மூழ்கியதால், மனம் கலங்கிய மக்கள், மாற்றாக கட்டிய தூய சவேரியார் ஆலயத்தின் நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில், மேட்டூர் அணை கட்டுவதற்கு முன், நீர்தேக்கப்பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தது. இதில், தற்போதைய பண்ணவாடி பரிசல்துறை அருகில் இருந்த நாயம்பாடி கிராமமும் ஒன்றாகும். கி.பி.,17ம் நூற்றாண்டில் காவிரி கரையோரம் நாயம்பாடி கிராமத்தில் கொடிய பிளேக் மற்றும் காலரா நோய் பரவியது. போதிய சிகிச்சை வசதி கிடைக்கததால், ஏராளமான மக்கள் நோய்க்கு பலியாகினர். நோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க, மக்கள் கூட்டம், கூட்டமாக செத்து மடிந்தவர்கள் உடலை புதைக்காமல், ஆற்றில் தூக்கி வீசுயுள்ளனர். அப்போது நாயம்பாடி பகுதியில், ப்ளேக் நோயில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டிய கிராம மக்கள், தூய ஆரோக்ய நாதர் சொரூபத்தை வைத்து வணங்கியுள்ளனர். அக்காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து மதபோதகராக தமிழகம் வந்த, பிரான்சிஸ் நாயம்பாடியில் ஒரு தேவாலயம் எழுப்பினார். இரு நூற்றாண்டு, நாயம்பாடி தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர். கடந்த, 1925ல் மேட்டூர் அணை கட்டுமான பணி துவங்கியது. அணையில் நீரை தேக்குவதற்காக நாயம்பாடி, சாம்பள்ளி உள்பட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பல தலைமுறையாக காவிரி கரையோரம் வசித்த கிராம மக்கள் தங்கள் வீடு, நிலம், கோயில், தேவாலயம் ஆகியவற்றை அப்படியே விட்டு, உடைமைகளுடன் மேடான பகுதிகளில் குடியேறினர். நாயம்பாடி கிராத்தில் வசித்த கிறிஸ்தவர்கள், கொளத்தூர் அடுத்த, சவேரியார் பாளையத்திலும், கர்நாடகா மாநிலம், மாட்டெல்லியிலும் குடியேறினர். கடந்த, 1934ல் மேட்டூர் அணை கட்டி முடித்து, 120 அடி உயரம் நீர் தேக்கியதும், 30 கிராமங்களில் இருந்த வீடுகள், கோயில்கள், நாயம்பாடி தேவாலாயம் நீரில் மூழ்கியது. அணைக்குள் மூழ்கிய ஆலயத்தை கண்டு மனம் கலங்கிய மக்கள், அதற்கு மாற்றாக தாங்கள் குடியேறிய சவேரியார் பாளையத்தில், 1910ல் தூயசவேரியார் ஆலயம் கட்டினர். கடந்த, 1943 வரை மைசூரூ மறைதளத்தின் ஒரு பகுதியாக இருந்த தூய சவேரியார் ஆலயம், அதன் பின், சேலம் மறைமாவட்டம் கட்டுப்பாட்டில் வந்தது. இந்நிலையில், மேட்டூர் அணைக்குள் இருந்த நாயம்பாடி தேவாலயத்தின் கட்டிடம் முழுவதையும் மண் மூடி விட்டது. இதனால், தேவாலயத்தின் இரு கோபுரங்கள் மட்டுமே மண்ணுக்குள் மேல் தெரிகிறது. வெளியில் தெரியும் நாயம்பாடி கோபுரத்தின் நினைவாக சமீபத்தில் சவேரியார் பாளையத்தில் உள்ள தேவாலயத்தில் இரட்டை கோபுரங்கள் அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க சவேரியார் பாளையம் தேவாலயத்தின் நூற்றாண்டு விழா நாளை நடக்கிறது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் வசிக்கும், மேட்டூர் அணையில் மூழ்கிய நாயம்பாடி கிராமத்தில் வசித்த கிறிஸ்தவர்களின் சந்ததியினர் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவாலய பங்கு தந்தை ஜெய் பெர்னார்ட் ஜோசப் செய்துள்ளார்.