பதிவு செய்த நாள்
06
டிச
2013
11:12
தேனி: ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அளவு பஸ்களை இயக்க, குமுளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில், இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். கோயிலுக்கு சென்ற பின், பக்தர்கள் இதே வழித்தடத்தில் ஊர் திரும்புவார்கள். இதனால், குமுளியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். எனவே குமுளி-பழனி, குமுளி- திருச்சி, குமுளி- திண்டுக்கல், குமுளி- கோவை, குமுளி- மதுரை என குமுளியில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை எந்த நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் பக்தர்கள் கும்பலாக வருவார்கள். சில நேரங்களில் தனித்தனியாக வருவார்கள். எனவே பக்தர்களின் வருகை, மற்றும் தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க, இங்கு கிளை மேலாளர் அந்தஸ்த்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும், குமுளியில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மகர ஜோதி முடித்து, பக்தர்கள் அனைவரும் திரும்பும் வரை இந்த அலுவலகங்கள் செயல்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.