பதிவு செய்த நாள்
07
டிச
2013
10:12
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 64 கோவில்களில், 32 லட்சம் ரூபாய் செலவில், புனரமைப்பு பணிகள் விரைவில் துவக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில், மொத்தம், 1,134 பெரிய, சிறிய கோவில்கள் உள்ளன. இதில் ஆண்டு வருமானம், 10 ஆயிரத்துக்கும் அதிகமாக, கோவை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் வரும் பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில் உள்பட, 193 பெரிய கோவில்கள் உள்ளன. சுற்றுப்புற கிராமங்களில் உள்ள, ஆதிதிராவிடர்களுக்கான, 31 கோவில்கள் மற்றும், 33 பொதுக்கோவில்கள் உள்பட மொத்தம், 64 கோவில்களுக்கு, இந்தாண்டு புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ஒரு கோவிலுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் வீதம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அறநிலையத்துறை கண்காணிப்பாளர் முருகைய்யா கூறியதாவது: கடந்த, 2012-13ம் ஆண்டில், 10 ஆதிதிராவிடர், எட்டு பொதுக்கோவில்கள் உள்பட மொத்தம், 18 கோவில்கள் புனரமைப்பு செய்யப்பட்டன. துவக்கத்தில் புனரமைப்பு நிதி, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பின், 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, 2010ம் ஆண்டில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்தாண்டு மொத்தம், 64 கோவில்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ள, கோவில் பெயரில் கணக்கு துவக்கப்பட்டு, கோவில் திருப்பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். அதேபோன்று மாவட்டத்தில், 21 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக, ஈரோடு பத்ரகாளியம்மன் கோவில் உள்பட, மூன்று கோவில்களில் துவக்க, அனுமதி கோரி திட்ட வரைவு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு உத்தரவு வந்ததும், அன்னதானம் வழங்கப்படும் கோவில்கள் எண்ணிக்கை, 24 ஆக உயரும், என்றார்.