பதிவு செய்த நாள்
13
டிச
2013
10:12
தஞ்சாவூர்: பெரியகோவிலுக்கு புதிய பிரம்மாண்டமான தேர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைப்பு பணிகள், தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தேர் அடிப்பாகம் பொருத்தும் பணியை, சிறப்பு பூஜை நடத்தி, ஸ்தபதிகள் துவங்கினர். தஞ்சை பெரியகோவிலுக்கு பிரம்மாண்டமான புதிய தேர் செய்வதற்காக, 50 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இதை கடந்த சட்டசபை தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து தஞ்சையில் கடந்த செப்., மாதம், 16ம் தேதி பெரியகோவிலுக்கு தேர் செய்யும் பணி துவங்கப்பட்டது. தஞ்சை மேலவீதியிலுள்ள ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ ராமர் கோவிலில் தேர் செய்யும் பணிகள், இரு பிரிவாக நடந்தது. தொடர்ந்து தற்போது ராமர் கோவில் அருகில் பெரியதாக "ஷெட் போடப்பட்டு, அதில் தேர் பாகங்கள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளில், ஸ்தபதி அரும்பாவூர் வரதராஜன் தலைமையில், ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தேர் அடிப்பாகம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இதற்குரிய சம்பிரதாயப்படி, சிறப்பு பூஜை காலை, 11 மணிக்கு நடந்தது. இதில் அ.தி.மு.க., விவசாய பிரிவு மாநில செயலாளர் தங்கமுத்து, எம்.எல்.ஏ., ரங்கசாமி மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின் ஸ்தபதி வரதராஜன் கூறியதாவது: தஞ்சை பெரியகோவில் தேரில் முதல் அங்கணம் அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. முதல் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 40 சிற்பங்களும், 2ம் கட்ட பணியில் இரண்டேகால் அடி உயரத்தில், 56 சிற்பங்களும், 3ம் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 56 சிற்பங்களும் செதுக்கப்படும். தரைமட்டத்தில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை, பதினாறு அரை அடி உயரத்தில் தேர் அமைக்கப்படும். ஒவ்வொரு சக்கரமும், ஆறரை அடி உயரமும், அச்சு நீளம், பதினான்கரை அடி உயரமும் உடையது. தேர் அமைப்பு பணி நிறைவடைந்தவுடன் நான்கு புறமும், 160 மணிகள் பொருத்தப்படும்,இவ்வாறு அவர் கூறினார்.