பதிவு செய்த நாள்
16
டிச
2013
11:12
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் நாளை( டிச.17ல்) ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவதையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வளாகத்தில் நடராஜர் கோயில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சிலை உள்ளது. இச்சிலை ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் நடராஜர் சிலை. சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சந்தனக்காப்பு களையப்படும்.நாளை( டிச.,17) காலை 10.30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் களைதலும், காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 10 மணிக்கு ஆருத்ரா மகாஅபிஷேகமும் நடந்து, சந்தனம் சாத்தப்படும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், இலவச தரிசனம், ரூ.10, ரூ.100 என, 3 வரிசைகளில் மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் நாகராஜன் மேற்பார்வையில் குடிநீர், சுகாதாரம், மின்சார பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் எம்.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது;ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், கீழக்கரை, சாயல்குடி, கமுதியில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன, என்றார். விழா ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன் செய்துள்ளனர்.