பக்தர்களிடம் திணிக்கப்படும் கட்டண உயர்வு: தேவசம்போர்டு ஊழியர் சங்கம் எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2013 10:12
சபரிமலை: பகத்ர்களிடம் திணிக்கப்படும் கட்டண உயர்வுக்கு தேவசம்போர்டு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சங்க தலைவர் அஜித் பிரசாத் சபரிமலையில் கூறியதாவது: திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள 1200க்கும் மேற்பட்ட கோயில்கள் சபரிமலை வருமானத்தை நம்பியுள்ளது. வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரசாத கட்டணத்தை அடிக்கடி தேவசம்போர்டு உயர்த்துகிறது. இது ஒரு நல்ல தீர்வு அல்ல. வருமானத்தை அதிகரிக்க, மாற்றுவழி கண்டு பிடிக்க வேண்டும். கோயில் மற்றும் தேவசம்போர்டுக்கு சொந்தமான சொத்துக்களில் கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். சபரிமலை உள்ளிட்ட கோயில்களுக்கு பிரசாதம் "பேக்கிங் செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்க்கு டின்கள் மற்றும் பேப்பர் கவர்கள் விலைக்கு வாங்கப்படுகிறது. இதை தவிர்த்து, தேவசம்போர்டே டின்கள் பேப்பர் கவர்கள் உற்பத்தி செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட அரவணை பிளான்டில்தான், தற்போதும் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கோளாறு ஏற்பட்டால் நிலைமையை சமாளிப்பது சிரமம். எனவே, புதிததாக ஒரு பிளான்ட் துவங்க வேண்டும். ஒரு சீசனில் மின் கட்டணமாக மட்டும் ஒன்றை கோடி ரூபாய் தேவசம்போர்டு செலுத்துகிறது. இதை அரசு மானியமாக வழங்க வேண்டும். நிலக்கல்லில் பிற மாநிலங்களுக்கு நிலம் வழங்கும் போது அதன் முழு உரிமையும், கட்டுப்பாடும் தேவசம்போர்டிடம் இருக்க வேண்டும். அறைகளுக்கான கட்டண உயர்வை தேவசம்போர்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.