தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி மாத அதிகாலை வழிபாடு, அவிநாசி வட்டார கோவில்களில் நேற்று துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடத்தப்பட்டது. அவிநாசியப்பர், கருணாம்பிகை அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தன. மார்கழி முதல் நாள் என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வார வழிபாட்டு குழுவினர், திருவெம்பாவை, சிவபுராணத்தை பாராயணம் செய்து வீதியுலா சென்றனர். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வர சுவாமி கோவில் மற்றும் கிராமப்புற கோவில்களிலும் மார்கழி மாத வழிபாடு துவக்கப்பட்டது. அடுத்த மாதம் 14ம் தேதி வரை தினமும் அதிகாலை பூஜை நடக்கும்.