விருதை விருத்தகிரீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிக்கு சாரம் அமைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2013 10:12
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மேற்கு கோபுரத்தை புனரமைக்க சவுக்கு மரங்களால் சாரம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருத்தாசலத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் அரச மரக்கன்றுகள், செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டது. மேற்கு கோபுரத்திலிருந்த அழகிய பொம்மைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் கோபுரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி "தினமலர் நாளிதழில் கடந்தாண்டு ஏப்ரல் 24ம் தேதி செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து செடிகள் கருகும் ரசாயன மருந்துகளை தெளித்தனர். அது போதிய பலனளிக்கவில்லை. மீண்டும் மரக்கன்றுகள் வளரத் துவங்கின. அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம், மேற்கு கோபுரத்தை 18.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க முடிவு செய்து, கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி பாலாலய யாகம் நடந்தது. தொடர்ந்து மேற்கு கோபுரத்தின் நான்கு புறமும் சவுக்கு மரங்களால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.