பதிவு செய்த நாள்
18
டிச
2013
11:12
திருவான்மியூர்: மருந்தீசுவரர் கோவிலில், திருவாதிரை திருவிழாவையொட்டி, அம்பாளுடன், நடராஜர், சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளை வலம் வந்தார்.ஒவ்வொரு ஆண்டும், திருவாதிரை நட்சத்திரம் அன்று, சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. சில சிவாலயங்களில் ஆருத்ரா திருவாதிரை திருவிழா, நட்சத்திர பிறப்பு காலத்தையொட்டி, நேற்று கொண்டாடப்பட்டது.சென்னையில் உள்ள கோவில்களில் மிகவும் தொன்மையான மருந்தீசுவரர் கோவிலில், நேற்று, திருவாதிரை திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், பின் வீதி உலா உற்சவமும் நடந்தது.அம்பாளுடன், நடராஜர் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 7:00 மணிக்கு தியாகராஜர் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, அம்பாள் சன்னிதி முன், 18 திருநடனக் காட்சியும், அரைக்கட்டு உற்சவமும் நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவாலயங்களிலும், ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இன்று, சிதம்பரம் உள்ளிட்ட சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.