தென் மாவட்டங்களில் இடுப்பில் குழந்தையுடன் உள்ள அம்மனை இசக்கியம்மன் என அழைப்பார்கள். குழந்தைகளை பாதுகாக்கும் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். புதன் ஸ்தலமான திருவெண்காட்டில் (நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அருகிலுள்ளது) இவளை இடுக்கி அம்மன் என்கிறார்கள். இவ்வூருக்கு வந்த ஞானசம்பந்தர் மணலுக்குள் சிவலிங்கங்கள் புதைந்து கிடப்பதை அறிந்து கோயிலுக்கு நடந்து செல்ல தயங்கினார். பாதங்கள் அந்த பூமியில் படுமே என்ற பயம். எனவே ஊர் எல்லையிலுள்ள அம்மன், குழந்தை சம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோயிலுக்கு தூக்கி சென்றாள். எனவே இடுக்கி அம்மன் என அழைக்கப்பட்டாள். இடுக்கி அம்மன் கோயிலுக்குச் சென்று சம்பந்தரையும் அம்பாளையும் தரிசிப்பவர்களின் குழந்தைகள் நலமாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.