பதிவு செய்த நாள்
27
டிச
2013
12:12
பழநி: பழநி தைப்பூச திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வினியோகம், பாதுகாப்புபணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். பழநியில் தைப்பூச திருவிழா ஜன.11 முதல் 20 வரை நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வெங்கடாசலம், ஜெயச்சந்திரன் எஸ்.பி., கோயில் இணை ஆணையர்(பொ) ராஜாமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு: இடும்பன் குளத்தில் சுகாதாரமற்ற நிலை உள்ளது. பாதயாத்திரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்து வரும் பஸ்கள் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிறுத்துவதும். அங்கு அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும். மலைகோயிலில் சுகாதார துறை மூலம் இரண்டு மருத்துவ குழுக்கள் இயங்கும். ஸ்டெச்சர், டோலி வசதி நோயாளிகளுக்கு செய்து தரப்படும்.கோயில் சார்பில் 52 இடங்களில் தற்காலிக நிழற்பந்தல், குடிநீர் வசதி செய்துதருதல், இடும்பன் குளம் அருகே ஆழ்குழாய் அமைத்து, பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்தல், மூன்று மொபைல் கழிப்பறைகள் இயக்கப்படும். கோயில், நகராட்சி சார்பில் கூடுதல் சுகாதாரப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர். படிப்பாதை, யானைப்பாதைகளில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரப்படும். விழாநாட்களில் மலைகோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், கீழே இறங்குபவர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்படுவர். தைப்பூச விழா நடக்கும், பத்து நாட்களிலும் மின்சாரம் தடையின்றி வினியோகம் செய்யப்படும். பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் பாலசுப்ரமணியன், நகராட்சி கமிஷனர் சரவணக்குமார், தலைவர் வேலுமணி, டாக்டர் விஜயசேகர்உட்பட பலர் பங்கேற்றனர்.