பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் அதியான உற்சவம் ஜன.1ல் துவங்குகிறது. அதியான உற்சவம் 21 நாட்கள் நடைபெறும். முதல் பத்துநாட்கள் பகல் பத்தும், கடைசி பத்து நாட்கள் இரவு பத்தும் நடைபெறும். பதினொறாம் நாள் வைகுண்ட ஏகாதசியும் நடைபெறும். ஜன.1ம் தேதியன்று காலை 10 மணிக்கு,பெருமாள், ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளுவார்.பின்னர், பெருமாளுக்கும்,ஆண்டாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறும். கோஷ்டியாக,திவ்யபிரபந்தம் பாடப்பெறும். மாலை 6 மணிக்கு, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல்நடைபெறும்.இவ்வாறு பகல் பத்து நாட்கள் நடைபெறும்.ஜன.10ல் திருமங்கையாழ்வார் திருவடித் தொழுதல் நடைபெறும். மறுநாள், ஜன.11ல் காலை 10 மணிக்கு திருமாமணி மண்டபத்தில்,பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சயன கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இரவு 8 மணிக்கு, பெருமாள், ராஜாங்க சேவையில் காட்சி தருவார். இரவு 10 மணிக்கு பரமபதவாசல் முன்பாக எழுந்தருள,தொடர்ந்து பரமபத வாசல் திறக்கப்படும். பரமபதவாசல் வழியாக பெருமாள் சென்று, ஏகாதசி மண்டபம் எழுந்தருளுவார். தொடர்ந்து, பத்தி உலாத்துதல், பெருமாள், தாயார் சன்னதி எழுந்தருளல் நடைபெறும். தொடர்ந்து இரவு பத்து துவங்கும். தினசரி இரவு 7 மணிக்கு தாயார் சன்னதியில், பெருமாள் எழுந்தருளி, இரவுப் பத்து நடைபெறும்.ஜன.,21 ம் தேதியன்று மாலை, நம்மாழ்வார் திருவடித் தொழுதல் நடைபெறுவதுடன் உற்சவம் பூர்த்தியடையும்.