பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
திருச்சி: லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில், 100 டன் சுவாமி ஆடைகள் தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள, சப்தரிஷீஸ்வரர் கோவில், சிதம்பரம், தில்லை நடராஜர் கோவிலுக்கு அடுத்தப்படியாக, ஆருத்ரா தரிசனம் நடக்கும் சிறப்பு வாய்ந்தது. நேற்று மதியம், 12:30 மணிக்கு, பூஜை முடிந்து, நடை சாற்றப்பட்டது. மதியம், 1:40 மணிக்கு கோவிலிலிருந்து, பயங்கர புகை வந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், கோவில் அதிகாரிகளுக்கும், நிர்வாகத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். கோவிலில், சுவாமிகளுக்கு சாற்றப்பட்ட அலங்கார ஆடைகள், நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்திய பட்டுப்புடவை உள்ளிட்ட, 50 ஆண்டுகளாக செலுத்திய, 100 டன் ஆடைகள், தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்புத் துறையினர், இரண்டரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். ஆடைகள் முழுவதும் எரிந்த நிலையில், அருகிலிருந்த கல் தூண்கள் சேதமடைந்தன. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ராமநாதன் கூறுகையில், ""கோவிலில், குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. மின் ஒயர்களை அடிக்கடி பிய்த்து விடுகின்றன. மின் ஒயர்களை மாற்றுவது தொடர்பான மதிப்பீடு பணிகள் நடக்கும் நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது, என்றார். சுவாமி ஆடைகள் எரிந்ததால், ஏதேனும் அசம்பாவிதம் நேருமோ என, சிவபக்தர்கள் அஞ்சுகின்றனர்.