பதிவு செய்த நாள்
02
ஜன
2014
10:01
வில்லிபுத்தூர்: வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பகல் பத்து உற்வசத்தையொட்டி, நேற்று பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்வசம், நேற்று மாலை துவங்கியது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பெரியாழ்வார் பரம்பரையை சேர்ந்த வேதபிரான் பட்டர் மாளிகையில் மாங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், வெண்டைக்காய் உட்பட பச்சை காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னார் சீதனமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், அங்கிருந்து பகல் பத்து மண்டபத்திற்கு புறப்படுதல் நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் செய்திருந்தனர். நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதல் ஆண்டாள் கோயிலில் ,நீண்ட வரிசையில் காத்திருந்து ,ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்கனவே கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தீவிர சோதனைக்கு பின் கோயிலுக்குள், அனுமதிக்கப்பட்டனர்.