பதிவு செய்த நாள்
04
ஜன
2014
10:01
கோவை :அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், 22ம் ஆண்டு தேர் திருவிழா, கோவையில், இன்று நடக்கிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவிய ஆச்சாரியார் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால், அமெரிக்கா சான்பிரான்ஸிஸ்கோ நகரில், 1976ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாரம்பரிய விழா, உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில், "ஹரே கிருஷ்ணா பக்தர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, கோவையில் தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 3:00 மணியளவில், ராஜவீதி தேர்முட்டியில் துவங்கும் ரத யாத்திரையில், பகவான் ஜகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி திருவுருவங்கள் வைக்கப்பட்ட 42 அடி உயரமுள்ள பிரமாண்டமான தேர், ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக வலம் வந்து, மீண்டும் தேர் முட்டியை அடைகிறது. பின், அவிநாசி சாலையில் அமைந்துள்ள பத்மாவதி அம்மாள் கல்யாண மண்டபத்தில், ஆன்மிக சொற்பொழிவு, மூத்த சந்தியாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளும் ஆன்மிக கருத்தரங்கம், ஆராதனை, நாமசங்கீர்த்தனம், கலை நிகழ்ச்சிகள் 5ம் தேதி இரவு வரை நடக்கிறது.