பதிவு செய்த நாள்
15
ஜன
2014
10:01
ஈரோடு: ஈரோடு நகரில் கோவில்களில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து ஸ்வாமி தரிசனம் மேற்கொண்டனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை விவசாயிகளும், பொதுமக்களும் சிறப்பாக கொண்டாடினர். ஈரோடு நகரில் பெரியமாரியம்மன் வகையறா கோவில்கள், ஈஸ்வரன் கோவில், கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், அதிகாலை முதலே, சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜை நடந்தது. பொதுமக்கள், குடும்பத்துடன் வந்து, கோவில்களில் தரிசனம் மேற்கொண்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வண்டியூரான் கோவில் பகுதியில் விவசாயிகளும், பொது மக்களும் கூடி பொங்கலிட்டு வழிபட்டனர்.சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி, சங்ககிரி ஆகிய ஊர்களில் இருந்து, தைப்பூச திருவிழாவுக்கு பழனிக்கு பாதயாத்திரை செல்ல கூட்டம் கூட்டமாக, ஈரோடு நகர் வழியாக பக்தர்கள் வந்தனர்.இவர்களுக்கு, நகரில் பல இடங்களில் கூடாரம் அமைத்து, சாப்பாடு, கலவை சாதம், சுத்திகரித்த பாக்கெட் குடிநீர், பழம், பிஸ்கட், குளிர்பானம், கரும்பு, பொங்கல் ஆகியவற்றை பொதுமக்கள் வழங்கினர்.