பதிவு செய்த நாள்
22
ஜன
2014
11:01
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை விமரிசையாக நடத்த அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வரும் 30ம் தேதி கொடிக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. பிப்., 12ம் தேதி மயான பூஜையும், 13ம் தேதி காலை 8:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம்; மாலை 6:30 மணிக்கு மகா பூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 14ம் தேதி மாலை 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல்; அம்மன் திருவீதி உலாவும்; இரவு 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்ப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, 15ம் தேதி காலை 8:30 மணிக்கு குண்டம் இறங்குதல்; 16ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8:00 மணிக்கு மகாமுனி பூஜை, 17ம் தேதி பகல் 11:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. விழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே தலைமை வகித்தார். தாசில்தார் சுமகுமாரி, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்," குண்டம் திருவிழாவில் கூட்டம் அதிகம் வரும் நாட்களான கொடியேற்றம், மயான பூஜை, சித்திரத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல், குண்டம் இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறும் போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் கூடுதல் பாதுகாப்பு அவசியமாகும். மேலும், விழா முடியும் வரை பாதுகாப்பு வசதிகளை போலீசார் பலப்படுத்த வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
வரும் 30ம் தேதி முதல் பிப்.,17ம் தேதி வரை எல்லா நாட்களிலும், 24 மணி நேரமும் தொடர்ச்சியாக தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஆனைமலை மற்றும் ஒடையகுளம் பேரூராட்சி நிர்வாகங்கள் சார்பில், சுகாதார வசதிகள், தற்காலிக கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், தங்கு தடையின்றி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மயான பூஜை நடைபெற உள்ள பகுதியினை சுத்தம் செய்து தர வேண்டும். உரிய இடங்களில், மின் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில், மருத்துவ வசதிகளுக்காக முதலுதவி மையம் இரண்டும், ஆம்புலன்ஸ் வண்டிகள் இரண்டும் ஏற்பாடு செய்ய வேண்டும். மயான பூஜை நடைபெற உள்ளதால், ஆம்புலன்ஸ் வண்டி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஊர்க்காவல் படை மூலமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஆனைமலை பகுதிக்குட்பட்ட நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், மாசாணியம்மன் கோவில் செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்; அன்னதானம் வழங்குவது கோவில் நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் வழங்கலாம். பக்தர்கள் கூட்ட நெரிசலை பொறுத்து, பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும். கோவில் நிர்வாகம் சார்பிலும், பக்தர்கள் வரிசையில் வந்து செல்வதற்கு ஏற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு, கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் வலியுறுத்தப்பட்டது.
தகவல் பலகை அவசியம்: சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே பேசுகையில்,"" விழாவை நன்றாக நடத்த அனைத்துத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக, ஆங்காங்கே துறை அதிகாரிகள் தொலைபேசி எண் அடங்கிய தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும். போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், என்றார்.கூட்டத்தில், வால்பாறை டி.எஸ்.பி., சக்திவேல், போலீசார், சுகாதாரத்துறை, போக்குவரத்து துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.