பதிவு செய்த நாள்
28
ஜன
2014
05:01
உத்தராயணப் புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவையன்றியும் பல தலங்கள் உள்ளன.
முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.