பதிவு செய்த நாள்
30
ஜன
2014
04:01
ராமேஸ்வரம்: தை அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி தரிசனம் செய்தனர். தை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, மஹா தீபாரதனை நடந்தவுடன், பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். பின், கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களை நீராட, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். வெளியூர் பக்தர்கள் வசதிக்காக, மதுரை, விருதுநகர், திருச்சிக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் உட்கார்ந்து சாப்பிட(புளியோதரை சாதம்) வசதியின்றி, நான்கு ரதவீதியில் உள்ள பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்டனர். குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல், பக்தர்கள் தவித்தனர்.