பதிவு செய்த நாள்
30
ஜன
2014
04:01
நாகப்பட்டினம்: நாகை அருகே அந்தணப்பேட்டை கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான அண்ணாமலை நாத சுவாமி கோவிலின் விமானங்கள், ராஜகோபுரத்தில் மரங்கள், செடி, கொடிகள் முளைத்து பராமரிப்பு இன்றி கோவில் சிதிலமடைந்து கிடக்கிறது. திருப்பணிக்காக 3 ஆண்டுகளுக்கு முன் அரசு வழங்கிய பணம், நிர்வாக சீர்கேட்டால் அரசு கஜானாவில் முடங்கி கிடக்கிறது. நாகை அடுத்த அந்தணப்பேட்டை கிராமத்தில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலைநாத சுவாமி கோவில் உள்ளது. சமயக்குறவர்களால் பாடல் பெற்றதும்,திருவண்ணாமலைக்கு நிகரானது என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலின் பின்புறம் சிவன் கோவில் மரபுப்படிவிநாயகர்,வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்,காசி விஸ்வநாதர், தெட்சிணாமூர்த்தி, பஞ்சமூர்த்திகளுக்கு தனி தனி சன்னதிகள் அமைந்துள்ளது.நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ள இக்கோவிலின் தல விருட்சம் வன்னி மரம்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் திருப்பணி எப்போது நடந்தது என்று கிராம முதியவர்களுக்கு தெரியவில்லை.மூன்று மாட அமைப்பு கொண்ட ராஜகோபுரத்தில் சிற்பங்கள்,கலசங்கள் அனைத்தும் சிதிலமடைந்து கிடக்கிறது.கோவில் ராஜகோபுரம், விமானங்கள் அனைத்திலும் பராமரிப்பு இல்லாமையால் மரம்,செடிகள் வளர்ந்து காடாக காட்சி அளிக்கிறது.இக்கோவிலின் கொடிமரம் 1977 ம் ஆண்டு புயலில் சேதமடைந்ததால்,கிராம மக்களால் சீரமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது தொன்மை வாய்ந்த மர சிற்பங்களால் வடிவமைக்கப்பட்ட கலைநயமிக்க திருத்தேர்.15 அடி நீளம்,20 அடிஅகலம்,30 அடி உயரம் கொண்ட தேரில் மழை நீர் உட்புகா வண்ணம் ஓடுகளால் வேயப்பட்டுள்ளது.இத்தேரின் வீதியுலா நிறுத்தப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது தொன்மை வாய்ந்த தேர் மண்ணில் புதைந்து கிடக்கிறது.
இக்கோவிலுக்கு சொந்தமாக 12 வேலி விவசாய நிலம்,15 வீடுகள்,15 காலி மனைகள்,14 குளங்கள் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். கீழ்திசை அண்ணாமலையார் என்ற சிறப்பு பெற்ற இக்கோவிலை சீரமைத்து திருப்பணி செய்ய கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்ததன் விளைவாக, அரசின் பொது நிதியில் இருந்து கோவிலை சீரமைத்து திருப்பணி நடத்துவதற்காக கடந்த 2011 ம் ஆண்டு 15 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது. இருப்பினும் கோவிலின் நிர்வாக சீர்கேடுகளால் அரசு ஒதுக்கிய நிதி அரசு கஜானாவிலேயே முடங்கி கிடக்கிறது. இது குறித்து பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் திருப்பணிக்கான பணிகள் மட்டும் துவங்கவில்லை. தொன்மையான வரலாற்று சுவடான அண்ணாமலைநாத சுவாமி கோவிலை சீரமைத்து,திருப்பணி நடத்த அரசு முன்வர வேண்டும்.