வால்பாறை: ஊசிமலை எஸ்டேட் மாரியம்மன் கோவில் நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ள ஊசிமலை டாப் டிவிஷன் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த 1ம் தேதி கொடுமுடி தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று முன் தினம் இரவு கருப்புசாமி, மகாமாரியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று (2ம்தேதி) காலை காலை 5.00 மணிக்கு கணபதி பூஜையும், 6.00 மணிக்கு மகாஹோமமும் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை எடுத்து, கோவிலை வலம் வந்தனர் . அதன் பின்னர் காலை 9.00 மணிக்கு கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. காலை 11.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், பகல் 12.30 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.