பதிவு செய்த நாள்
16
ஏப்
2011
05:04
விஷ்ணு கோயில்களில் சிவன் சன்னதியைக் காண்பது அரிது. ஆனால், சில சிவன் கோயில்களில் மகா விஷ்ணுவிற்கு சன்னதிகள் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் பிரகாரத்தில், நிலாத்துண்டப் பெருமாள் இருக்கிறார். காமாட்சியம்மன் கோயிலில் அம்பாள் மூலஸ்தானத்தை ஒட்டிய ஒரு சுவரில் கள்வப்பெருமாள் இருக்கிறார். இம்மூன்று கோயில்களும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள். இதுதவிர, திருவோத்தூர், பவானி சிவாலயங்களில் ஆதிகேசவப் பெருமாள், திருநாவலூர் (சுந்தரர் பிறந்த ஊர்) சிவாலயத்தில் வரதராஜப் பெருமாள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நெல்லை கோவிந்தர், திண்டுக்கல் அபிராமி (பத்மகிரீஸ்வரர்) கோயிலில் வரதராஜர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பள்ளி கொண்ட பெருமாள், கொடுமுடி (ஈரோடு மாவட்டம்), திருப்புத்தூர் (சிவகங்கை மாவட்டம்), திருவக்கரை (காஞ்சிபுரம் மாவட்டம்) சிவாலயங்களில் ரங்கநாதர், திருப்புவனம் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவாலயத்தில் (தஞ்சாவூர் மாவட்டம்) கோவிந்தர், திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் (சுப்பிரமணிய சுவாமி) கோயிலில் பவளக்கனிவாய் பெருமாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோவிந்தராஜப்பெருமாள் ஆகியோர் உள்ளனர்.