பதிவு செய்த நாள்
14
பிப்
2014
12:02
சூலூர்: ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மேற்கு மாகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். கடந்த 28ம்தேதி இரவு சாமிசாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. 4ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. 11ம்தேதி பெண்கள் சீர் வரிசைகள் கொண்டுவர, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் நொய்யல் ஆற்றிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா துவங்கியது. இதில் ஏராளமான பெண்கள் பால் குடம் ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு கம்பம் கலைத்தல், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. வரும் 18ம்தேதி இரவு மகாமுனி பூஜையுடன் விழா நிறைவுறுகிறது. அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கருட வாகனத்தில், சுவாமியின் திருவீதி உலா நடந்தது. நேற்று கோவிலில் இருந்து ராமர் பாணத்தை எடுத்துக் கொண்டு பெட்டத்தம்மன் மலைக்கு சென்றனர். பின், அங்கிருந்து அருளில் அம்மனை அழைத்து வந்து, நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, அரங்கநாதப் பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவருக்கு மாங்கல்ய கயிறு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இத்தாலி நிறுவனத்துடன் கல்லுாரி ஒப்பந்தம் அன்னுார் : இத்தாலி நிறுவனத்துடன் ரங்கநாதர் பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. மருத்துவம், ராணுவம், தகவல் தொழில்நுட்பம், கப்பல் உள்ளிட்ட பல துறைகளில், எம்படட் சிஸ்டம் என்னும் மின்னணு பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை வடிவமைத்து தயாரிப்பதில், உலக அளவில் முன்னணி நிறுவனமாக இத்தாலின் சீகோ நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம், கோவில்பாளையம் அருகே அத்திப்பாளையம் ரங்கநாதர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. இதனால், எம்படட் சிஸ்டம் கோவையிலேயே தயாரிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு வழங்கப்படும். இது குறித்த நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தலைவர் நாராயணசாமி, இத்தாலி சீகோ நிறுவனத்தின் ஆசிய மண்டல தலைவர் அலெக்சாண்டர் சாடினி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கல்லுாரி இயக்குனர் மால்முருகன், முதல்வர் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.