சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை வழியாக 6 கி.மீ. தூரத்தில் எதிர்க்கோட்டை உள்ளது. கயலாறு என்ற பெயர் பெற்ற ஆற்றின் கிழக்குக் கரையில் எதிர்க்கோட்டை அமைந்திருக்கிறது. ஆற்றின் மேற்குக் கரையிலிருந்த கிராமங்களுக்கு எதிரில் கோட்டையுடன் இவ்வூர் இருந்ததால் இதற்கு எதிர்க் கோட்டை என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு. இங்கு ருக்மணி சத்யபாமா சமேதராக வேணுகோபாலன் சேவை சாதிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த கோவிந்தப்ப நாயக்கர் என்ற சிற்றரசர் இக்கோயிலையும் கோட்டையையும் அமைத்து காஞ்சிபுரத்திலிருந்து வேதமும் பிரபந்தமும் கற்றுத் தேர்ந்தவர்களை இங்கு குடியமர்த்தினார். அவர்களுக்கு ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்தார். வேத சாஸ்திரங்களில் மிகுந்த பாண்டித்யம் பெற்ற அந்தத் தலைவர், ஒருமுறை எதிரிகள் படையெடுத்து இங்கு வந்தபோது இந்த வேணுகோபாலனை தியானித்து, சுதர்ஸன மகாமந்திரத்தை ஜபித்து ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டாராம். அது ஊரைச் சுற்றி கோடு போட்டதாகவும், அதைத்தாண்டி எதிரிகள் இவ்வூருக்குள் நுழைய முடியாமல் திரும்பி விட்டதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன், கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலாக, மிகுந்த வரப்பிரசாதியாக சேவை சாதிக்கிறார். கருடாழ்வாருக்கும் ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.