சிவகங்கை மாவட்டத்தில் திருச்சுழி கிராமத்திற்கு அருகில் மண்டல மாணிக்கம் பூமிதேவி நீளாதேவி சமேத வேங்கடாஜலபதி ஆலயம் அமைந்துள்ளது. இங்குத் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் முடிந்து ஆலயம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. விநாயகரும் பக்த ஆஞ்சனேயரும் அப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டனர். கருவறையில் பூமிதேவி நீளாதேவி சமேதராக எழுந்தருளியுள்ள வேங்கடவன், மிகுந்த வரப்பிரசாதி. குறிப்பாக கல்யாணவரமும், குழந்தைவரமும் அருளுவதில் வல்லவர். திருவோணம், புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, ஆலய பிரதிஷ்டை தினம் ஆகியவை இங்கு சிறப்பிக்கப்படுகின்றன. மேலும் கோயிலில் நடைபெறும் 108 திருவிளக்கு பூஜையில் அக்கம்பக்க கிராமத்திலுள்ள பெண்டிரும் ஆர்வமோடு கலந்துகொண்டு பலன் பெறுகிறார்கள். இத்திருக்கோயிலில் நாகபிரதிஷ்டையும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்குச் சென்று செய்யப்படும் பிரார்த்தனைகளை இப்பெருமாள் ஏற்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.